Monday, December 26, 2011

உயிர் காக்கும் பரிசு—இரத்த தானம்.


எமது குருதியில் செங்குருதிச் சிறு துணிக்கைகள், வெண்குருதிச் சிறு துணிக்கைகள், குருதிச் சிறு தட்டுக்கள், திரவவிழையம் என்பன அடங்குகின்றன. இரத்த வங்கி, தானமாக வழங்கப்படும் குருதியிலிருந்து இவையனைத்தையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கின்றது.



இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுத் தேவையான நோயாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குருதியின் பிரிவுகள், குருதி மூலம் பரவும் நோய்களான எய்ட்ஸ், செங்கமாலை போன்றவை இரத்த தானம் செய்யும் ஒவ்வொருவருடைய குருதியிலும் உள்ளதா எனப் பரிசீலிக்கப்படுகிறது.

குருதித் திரவவிழையம் ஒரு வருடம் வரை அதி குளிரூட்டியில் வைக்கப்பட்டு அதன் தரம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு பொருத்தமான நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. செங்குருதிச் சிறு துணிக்கை வகைகள் இரத்த வங்கியின் குளிரூட்டியில் 2°செ-6°செ இல் வைத்து 35-42 நாட்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன.

குருதிச் சிறு தட்டுக்கள் 5 நாட்கள் மட்டுமே வாழக் கூடியவை. இதன் தேவை பல மடங்குகளாக இருப்பதால் இவை 5 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்து விடுகின்றன. இவை விசேடமான, அசையக் கூடிய தட்டுக்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. தொடர்ச்சியான அசைவு, இதன் இயல்புத் தன்மை கெடாமல் இருக்க அவசியமாகின்றது.

செங்குருதிச் சிறு துணிக்கைகள் எப்போதுமே தேவைப்படும் ஒரு பிரிவாகும். பெரும்பாலும் சடுதியாக ஏற்படும் குருதி இழப்புக்களை ஈடு செய்வதற்காகவே இவை தேவைப்படுகின்றன. வாகன விபத்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், குழந்தைப் பேறு, சத்திர சிகிச்சை போன்றவற்றின் மூலம் ஏற்படும் குருதி இழப்புக்கள் போன்றன அவற்றிற் சிலவாகும்.

சில நோயாளர்கள் செங்குருதிச் சிறு துணிக்கைகளின் உற்பத்தியில் பிறவிக் கோளாறு உடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் தங்களது வாழ் நாட்களை நீடிக்க இரத்த தானம் செய்பவர்களுடைய அரிய பரிசை வாழ்க்கை முழுவதும் எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கிறார்கள்.“தலசீமியா” அவ்வாறான நோய்களுள் ஒன்றாகும். எமது நாட்டிலுள்ள பிரதான நோய்களுள் இதுவுமொன்றாகும்.

குருதிச் சிறு தட்டுக்கள் குருதி உறைதலுக்கு உதவுகின்றன. இவை டெங்கு நோயாளர்கள், புற்று நோய்க்கான மருந்து உட்கொள்வோர் ஆகியோருக்கே அதிகம் தேவைப்படுகின்றன. அவர்களும் இரத்த தானத்தை எதிர்பார்க்கிறார்கள்.

வெண்குருதிச் சிறு துணிக்கைகள் மிகவும் நோய்வாய்ப்பட்ட, சிறந்த மருந்துகள் கூடப் பயனளிக்காத நிலையில் நோய்த் தொற்றுள்ளோருக்கு அவசியமாகின்றன. வெண் குருதிச் சிறு துணிக்கைகள் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடக்கூடியவை.

குருதித் திரவவிழையம் குருதி உறைதலுக்கான அவசியமான பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவையின்றி சிறு காயங்கள் மற்றும் பல் பிடுங்கும்போது ஏற்படும் குருதி இழப்புக்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில நோயாளர்கள் பிறவிக் கோளாறு காரணமாகவும் இவற்றை உற்பத்தி செய்யும் திறனற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்குத் திரவவிழையமும் அதனைச் சாரந்த பதார்த்தங்களும் அவசியமாகின்றன.

ஒரு பைன்ற் இரத்தம் ஒருவரின் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. வெண்குருதிச் சிறு துணிக்கைகள், செங்குருதிச் சிறு துணிக்கைகள், குருதிச் சிறு தட்டுக்கள், திரவவிழையம் போன்றன பிரித்தெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, தேவைக்கேற்ப ஏனைய நோயாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இரத்தம் யாருக்கும், எவ்வேளையிலும், எங்கேயும் தேவைப்படலாம். ஆகையால் நாமும் இரத்த தானம் செய்ய முன்வருவோம்!

0 comments:

Post a Comment