Thursday, December 29, 2011

போதைக்கு அடிமையாவதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்.


உலகம் முழுவதும் மது, புகை மற்றும் கொகைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதில் ஆண், பெண் வித்தியாசம் எதுவும் இல்லை. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் போதை பொருள் பயன்படுத்துகின்றனர். இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கை சூழலே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் பெண்கள் தான் அதிகம் உள்ளனர்.
பெண்களும் போதைப் பழக்கமும் என்ற தலைப்பில் நீண்ட ஆய்வும் கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டது. இதில் ஆண்களை விட பெண்களே எளிதில் மது, புகை மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது தெரியவந்துள்ளது. இத்தகைய பெண்கள் சிகிச்சைக்கு பிறகு கூட போதை பழக்கத்தில் இருந்து விடுபட முடிவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக கொகைன் என்ற போதைப் பொருளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் அதிக அளவில் அடிமையாகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதும் ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்.

கலிபோர்னியா பல்கலைக்கழக மனநல ஆராய்ச்சியாளர்கள் ஜெனிபர் க்யுமிங் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் போது ஆண் மற்றும் பெண் எலிகளுக்கு கொகைன் கொடுத்து பரிசோதித்து பார்க்கப்பட்டதில் இந்த உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பல பெண்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையே இழக்க நேரிடுகிறது. திருந்திய பின்பும் அவர்களால் தொடர்ந்து அமைதியான வாழ்க்கை மேற்கொள்ள முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது.

இதனால் பலர் மனமுடைந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இளம் வயதிலேயே மேற்கொள்ளும் பயிற்சிகளும் சிகிச்சையும் தான் போதை பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.




0 comments:

Post a Comment